Thursday, June 11, 2015

நரிக்கு கிடைத்தது மனிதனுக்கு கிடைக்கவில்லை

ஒரு ஊர்ல ஒரு வியாபாரி இருந்தார். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். ஒரு முறை இளைப்பாறுவதற்காக ஒரு காட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த இடத்தில் ஒரு ஊனமான நரி நடக்க முடியாமல் படுத்திருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் ஒரு புலி ஒன்று மானை வேட்டையாடி விட்டு மாமிசத்தை தின்று கொண்டே அந்த வழியாக போய்க்கொண்டு இருந்தது. அதை அந்த வியாபாரியும் நரியும் பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். பசி முற்றிலும் தீர்ந்த பின்னர் அந்த புலி மீதி மாமிசத்தை வழியிலேயே போட்டு விட்டு சென்று விட்டது. பின்னர், புலி சென்று விட்டதை உறுதி செய்து கொண்ட நரி மெதுவாக நகர்ந்து போய்  அந்த மீதி மாமிசத்தை சாப்பிட்டது. சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து படுத்து கொண்டது. இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த வியாபாரியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. அதாவது எதுவுமே செய்யாமல் படுத்துக்கொண்டிருக்கும் இந்த நரிக்கு மாமிசம் கிடைத்தது போல் நாமும் சும்மா இருந்தால் கடவுள் நம்மை காப்பாற்றி விடுவார் என்று முடிவு செய்து ஒரு மடத்தில்  போய் சும்மா உட்கார்ந்து இருக்க ஆரம்பித்தார்.
நாட்கள் நகர ஆரம்பித்தன. ஆனால் அவர் நினைத்தபடி எதுவும் கிடைக்கவில்லை. எனவே கடவுளின் மீது கோபம் கொண்ட அவர் கடவுளிடம் "எந்த உழைப்பும் இல்லாத அந்த நரிக்கு மட்டும் தேவையானது கிடைக்கும் பொது எனக்கு ஏன் எதுவும் கிடைப்பதில்லை. நானும் உனது படைப்பு தானே, என்னை மட்டும் ஏன் சோதிக்கிறாய்" என கடவுளிடம் முறையிட்டான்.

உடனே கடவுள் அவன் முன் தோன்றி "மகனே! நீ கண்ட அந்த காட்சியில் பாடம் கற்று கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து அல்ல, புலியிடமிருந்து தான்". அந்த புலி எப்படி உழைத்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை அடுத்தவருக்கு கொடுத்ததோ அதே போல் தான் நீயும் இருக்க வேண்டும்.

பாடம் கற்றுக் கொள்வது முக்கியமல்ல. யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.

 

No comments:

Post a Comment