அரசு பள்ளியில் ஒரு மதிய வேளையில்,
ஆசிரியர்:"டேய் முத்து,சிவா,பிரபு உங்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கு பணம் வாங்கணும்னா சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டையும் இன்னும் ஒரு வாரத்துல ஆபிஸ் ரூம்ல கொடுத்துருங்க"
முத்துவின் வீட்டில்,
முத்து: "அப்பா, எங்க ஸ்கூல்ல எனக்கு ஸ்காலர்ஷிப் தர்றாங்கப்பா, அதுக்கு சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டும் வேணுமாம்.நாளைக்கு போயி வாங்கிட்டு வந்து கொடுப்பா"
முத்துவின் அப்பா: "இரு இரு இன்னும் ரெண்டு நாள் போகட்டும் நாளை கழிச்சு நடவு வச்சிட்டு நானே ஆள் கிடைக்காம தவிச்சுக்கிட்டு கிடக்கிறேன்"
முத்து:"இல்லப்பா இன்னும் ஒரு வாரத்துல கொடுத்தாகனும் சீக்கிரம் வாங்கி தாங்கப்பா"
முத்துவின் அப்பா: "இந்த வாத்தி பயலுக்கு அறிவே இல்லையா? நடவு வச்சிருக்கிற நேரத்துல அத வாங்கிட்டு வா இத வாங்கிட்டு வா ன்னு உசிர எடுக்கிறான்".
தாசில்தார் அலுவலகத்தில்:
முத்துவின் அப்பா(சாதிச் சான்று விண்ணப்பத்தை நீட்டியவாறு):"எப்போ சார் சர்ட்டிபிகேட் கிடைக்கும்"
அலுவலர்: "இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்குங்க"
முத்துவின் அப்பா: "என்ன சார் சொல்றீங்க.இத கொடுக்க ரெண்டு வாரம் ஆகுமா?. சார் ஸ்கூல்ல இன்னும் ரெண்டு நாள்ல கொடுக்க சொல்லி இருக்காங்க, கொஞ்சம் சீக்கிரம் பாருங்க சார்"
அலுவலர்:" உங்களுக்கு மட்டும் நான் இங்க வேலை பார்க்கல, அங்க எத்தனை மூட்டை ஃபைல் இருக்குன்னு பார்த்தேல்ல. போ போ போயிட்டு 10 நாள் கழிச்சு வா பார்க்கலாம்"
முத்துவின் அப்பா அலுவலக பியூனிடம்:"என்னங்க ஒரு சர்ட்டிபிகேட் வாங்க 2 வாரம் ஆகும்னு சொல்றாங்க"
பியூன்:"என்ன சர்ட்டிபிகேட் வாங்கனும் உங்களுக்கு?"
முத்துவின் அப்பா: "சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று"
பியூன்:"நீங்க சட்டப்படி வாங்க நினைச்சா 2 வாரம் ஆகும்.என் கிட்ட 100 ரூபாய் கொடுங்க 2 நாளில் முடிச்சிடலாம்"
- மேற் சொன்ன ஒட்டு மொத்த உரையாடல்களும் நமக்கு தரும் பதில், லஞ்சத்தின் அடிப்படை ஆரம்பம் எங்கே என்ற கேள்விக்கு?
1) ஒரு கிராம நிர்வாக அதிகாரியால்() இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் எதற்கு 15 நாட்கள் தேவைப்படுகிறது-சாதிச் சான்று வழங்க.
2) இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்ய எதற்கு 50/100 ரூபாய் VAO க்கு தர வேண்டும்.விண்ணப்பித்தவருடைய தேவையின் அவசரமும், எதிர்த்தாலும் துணைக்கு வராத சட்டமும் இருப்பதால் தான் இந்த தவறு எங்கும் நடைபெறுகிறது.மேலும் அந்த VAO தான் இந்த வேலையில் சேருவதற்கு கட்டிய பல லகரங்களை வட்டியுடன் வசூல் செய்ய தூண்டுகிறது.
3)இந்த கணினி உலகத்தில் அனைத்தையும் இலகுவாகவும், விரைவாகவும் பெறத் துடிக்கும் மக்கள் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் திறமை அரசு நிறுவனங்களில் இல்லாமலிருப்பது எப்படி?.
இந்திய தேர்வாணையத்தின் அடிப்படையில் முதல் இடங்களை பிடிக்கும் சிறந்த மாணவர்கள் தான் அரசு அலுவல்களில் பணி புரிகிறார்கள்.அரசு வேலை இல்லாதவர்கள் தான் தனியார் நிறுவனங்களில் சேர்கிறார்கள்.அப்படியிருக்க எந்த ஒரு விஷயம் இரண்டு துறைகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது.
4) இந்த கால கட்டத்தில் காலம் தாழ்த்துதலே லஞ்சத்தின் ஒரு அடிப்படை காரணமாக இருக்கிறது.மக்களும் தங்கள் அவசரம் கருதி எதையும் தட்டி கேட்காமல் பணிந்து செல்கிறார்கள், அப்படி தட்டி கேட்பவர்கள் அடுத்தவர்களால் ஏளனம் செய்யப் படுகிறார்கள்.
5) அரசு நிறுவனங்களில் வேலை புரிய ஆசைப் படும் நாம் ஏன் ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்யவோ/அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவோ/அரசு நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்கவோ விருப்பம் காட்டுவதில்லை.இந்த ஒரு விஷயத்திலேயே நம் ஒவ்வொருவரின் ஆசையும், செயல் திறனும் புரிந்து விடும்.
6) எந்த ஒரு அரசு பணியாளரும் தன் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை.இதிலிருந்தே தெரிந்து விடுகிறது அந்த அதிகாரிக்கு தன் மேல் உள்ள நம்பிக்கை.
ஆமையின் வேகமும் ஊமையின் வார்த்தைகளும் என்றும் அரங்கமேறாது.
No comments:
Post a Comment