
எங்கள் ஊர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வருட உள்ளாட்சி தேர்தல் "30 நாள்" திருவிழா போல் நடந்து முடிந்திருக்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரால் தன்னைச் சார்ந்த தொகுதி ஊர்கள் அனைத்திற்கும் நேரடியாக பணியாற்ற முடியாத காரணத்தினால் ஒவ்வொரு ஊராட்சிக்கும்/பேரூராட்சிக்கும்/நகராட்சிக்கும்/மாநகராட்சிக்கும் அரசு திட்டங்கள் உடனடியாகவும், எந்த ஒரு குறை இல்லாமலும் சென்றடைய தலைவர்களையும்/செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவது தான் உள்ளாட்சி தேர்தல்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் மக்களிடையே கருத்து வேறுபாட்டையும்,வன்முறையையும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் நடத்தப்படும் ஒரு சண்டை களமாகவே நடந்தேறுகிறது.
ஒரு கிராமத்தில் அனைவருமே ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு வகையில் சொந்தம் என்றவொறு சங்கிலியால் பின்னப்பட்டிருப்பர்.இதில் தலைவராக போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் அனைவருக்கும் வேண்டப்பட்டவராகவே இருப்பர்.எனவே ஒவ்வொருவருக்கும் தனக்கு விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க உரிமை உள்ள நிலையில், பிரிவினையை தூண்டும் விதமாக சிலர் செயல்பட்டு ஊரின் ஒற்றுமைக்கு உலை வைத்து விடுகின்றனர்.
ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் பின்வரும் எதோ காரணங்கள் தான் உந்துதலாக இருக்க வேண்டும்.
1) ஊருக்கு நன்கு அறிமுகமானவர்
2) எல்லோருடனும் எளிதாக பழகக் கூடியவர்
3) பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்
4) ஊருக்கு தீங்கு நினைக்காதவர்
5) நல்ல ஒழுக்கம் உள்ளவர்
இதை எல்லாம் விட்டு விட்டு இவர் நம் வர்க்கத்தைச் சேர்ந்தவர்/இவர் நம் தெருவைச் சேர்ந்தவர்/இவர் நம் இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு கூட்டு அமைத்துக் கொண்டு பண பலம் மற்றும் ஆட்கள் பலத்தினால் தேர்ந்தெடுக்கப் படும் ஒரு தலைவர் எல்லோருக்கும் நன்மைகள் செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.இப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எப்படி பாரபட்சமின்றி செயல்படுவார்.அடுத்த கோஷ்டியினரை எதிரியாகவே பார்க்க தோணும்.
இந்த வருட தேர்தலில் நடந்தேறிய சில மறக்க முடியாத கூத்துக்கள்
1) பிராந்தி பாட்டில்களே ஓட்டு வாங்கும் ஒரு முக்கிய அங்கமாய் வகித்தது.தன் குடும்பத்தாராலே கூட மதிக்கப் படாத பல குடிமகன்கள் எதிர்கால ஊராட்சி மன்ற தலைவரால் மரியாதையுடன் பாட்டில்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.இதில் வேட்பாளர்கள் மறந்து போன 2 விஷயம், a)குடிமகன்களின் வீட்டு ஓட்டுகள் அவர்களுக்கு கிடைக்காது(ஏனென்றால் குடித்து விட்டு வந்து வீட்டில் செய்யும் ரகளையால் வேட்பாளரின் மேல் கோபமே ஏற்படும்). b) 29 நாட்கள் பாட்டிலைப் பெற்றுக் கொண்டு ஒரு நாள் பாட்டில் கொடுக்க மறந்திருந்தால் குடிமகன் ஓட்டை மாற்று வேட்பாளருக்கு போடுவான் என்று தெரியாதது.
2) ஒருவர் கூட தங்கள் அடுத்த ஐந்து வருட திட்டங்கள் பற்றி வாய் திறக்காதது(திறந்திருந்தாலும் அவர்கள் செய்த செலவு அவர்களை செய்ய விட்டிருக்காது)
3) ஊருக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது
4) ஏழ்மையான ஒரு நல்ல மனிதர் இனி தேர்தலில் நிற்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது
5) தலைவன் என்ற பதவிக்காக இருக்கிற மானம், மரியாதை எல்லாம் இழப்பது.
6) ஓட்டை பணத்திற்கு விற்கும் நிலையை ஏற்படுத்தியது.
ஊரை ஒருங்கிணைத்து செல்லவும், நல்ல திட்டங்கள் மக்களை சென்றடையவும் தான் தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.பதவி சுகத்துக்காக அலைபவர்களை அல்ல.நல்லது செய்ய பதவி தேவை இல்லை, நல்ல மனசு இருந்தால் போதும்.
மொத்தத்தில் குடிமகன்களின் கோலாகல விழாவாகவே அமைந்தது இந்த உள்ளாட்சி தேர்தல்